GCT யில் ஒரு VIP யுடன் சந்திப்பு !
சென்ற வாரம் GCT கல்லூரிக்கு, நான் பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus Recruitment) செல்ல நேர்ந்தது. எப்போதும் போலவே கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகானுபவமாகத் தோன்றியது! சந்தித்த மாணவப் பிரதிநிதிகள், மிக அடக்கமாகவும், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த மிக உதவியாகவும் இருந்தார்கள். Girls College of Technology என்று சொல்லும் அளவுக்கு மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது !! நான் பயின்ற காலகட்டத்தில், பொறியியற் படிப்பில் தகவல் தொழில்நுட்பம், கணினிவியல் போன்ற கிளைகள் இல்லை. நான் பழைய மாணவன் என்றவுடன் கல்லூரியின் Placement coordinator (முனைவர் தண்டபாணி) நான் கல்லூரி முதல்வரை (முனைவர் திரு. பழனிச்சாமி) சந்திக்க ஏற்பாடு செய்து விட்டார்.
அதற்கு முன்பே, நான் சந்திக்க விரும்பிய VIP க்கு போன் செய்து, என்னை சந்திப்பதற்கு GCT வர இயலுமா என்று கேட்டதற்கு, 'இதோ புறப்பட்டு வருகிறேன், எங்கு காத்திருக்கிறீர்கள் ?' என்றார் !!! சொன்னபடி, அரைமணி நேரத்தில் அந்த VIP வந்து சேர்ந்தார். சிலரை முதல் முறை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடும். VIPயும் அந்த வகையைச் சேர்ந்தவர். இதில் ஆச்சிரியம் என்னவென்றால், கோயமுத்தூரைச் சேர்ந்த, முன்னாள் GCT மாணவரான அந்த VIP, கிட்டத்தட்ட 15 வருடங்களூக்குப் பிறகு அன்று தான் GCT வளாகத்தில் காலடி எடுத்து வைக்கிறார் !!! நான் மூன்று வருடங்களுக்கு முன் மேற்கொண்ட GCT பயணம் குறித்து முன்பு நண்பனுக்கொரு மடல் வரைந்திருக்கிறேன்!
VIPயை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். முதல்வருக்கு ஏற்கனவே, VIP குறித்து ஒரு முன்னுரை தந்திருந்தேன் !! என் வேண்டுகோளுக்கு இணங்க, VIP தான் செய்து வரும் தமிழ்ப்பணி பற்றி முதல்வருக்கு அழகாக ஒரு சிறு குறிப்பு வரைந்தார் ! பின்னர், முதல்வருக்கு விடை கொடுத்து விட்டு, VIPயும் நானும் காண்டீன் சென்று சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம். VIP தான் சமீபத்தில் தொடங்கிய தொழில் மற்றும் வடிவமைத்து வரும் product குறித்தும் ஒரு சிறு விளக்கம் தந்தார். VIP மிகவும் interesting-ஆன மனிதர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் (அவரும் என்னைப் போலவே ஒரு GCTian இல்லையா :)) !!! அவருடன் நிறைய பேச விரும்பியும், நேரமின்மை காரணமாக முடியவில்லை. VIPக்கு விடை கொடுத்து விட்டு GCTக்கு வந்த வேலையை பார்க்கத் திரும்பினேன்!
ஒரு மாணவரை நேர்முகத் தேர்வு செய்தபோது, அவரை பணிக்கு எடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு சிறு குழப்பம் எனக்கும் என்னுடன் வந்த மேலாளருக்கும் நிலவியது. நான் அந்த மாணவரிடம் அவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்னவென்று வினவினேன் . அவர் 1170/1200 என்றவுடன், அவரை உடனே தேர்ந்தெடுத்து விட்டேன் !!! அம்மாணவர் நிச்சயம் கடின உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பின், கடின உழைப்பு என்ற ஒன்றை வைத்து, தேவையான பிற தகுதிகளையும் அந்த மாணவர் தனதாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
சரி, சரி ! VIP மேட்டருக்கு வருகிறேன் ! VIP வேறு யாருமில்லை, "தமிழ்மணம்" காசி தான் ! வலைப்பதிவுலகில் தற்போது நிலவி வரும் சச்சரவுகள்/சர்ச்சைகள் பற்றியும் கொஞ்சம் பேசினோம். அவற்றைப் பற்றி எழுதி எதையும் கிளறுவதாக இல்லை, மன்னிக்கவும் !!!
GCT நினைவுகள் பற்றி சமீபத்தில் எழுதியவை, உங்கள் பார்வைக்கு:
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 1
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4
என்றென்றும் அன்புடன்
பாலா